Tuesday, 2 May 2017

"Saravanan Irukka Bayamaen"


"Saravanan Irukka Bayamaen"


"Saravanan Irukka Bayamaen"
 
ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, சூரி நடிப்பில்  எழில் இயக்கியிருக்கும் படம் 'சரவணன் இருக்க பயமேன்'. ஏற்கனவே டி.இமான் இசையில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. மே 12ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 
 
எல்லா படங்களையும் நான் திரையரங்கில்  தான் பார்க்கிறேன். படம் நன்றாக இருந்தால் பத்து தடவை வரை பார்ப்பேன். மற்றவர்களை பார்க்க பரிந்துரை செய்வேன். நல்லா இல்லைனா திட்டிக் கொண்டே வருவேன். தியேட்டர் டிக்கட், கேண்டீன் விலை எல்லாம் குறைத்தால் நிறைய மக்கள் படம் பார்க்க வருவார்கள். நான் நடிப்பு பயிற்சி பள்ளி நடத்தி வருகிறேன், அதனாலேயே பார்த்த உடனே நடிப்பில் யார் தேறுவார்கள் என சொல்லி விடுவேன். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் படங்கள் பார்த்திருக்கிறேன், அவர் பெரிய ஹீரோவாக நிச்சயம் வருவார். ரெஜினா கஸாண்ட்ரா சிறந்த நடிகை. அவர் தமிழ் சினிமாவின் ஜூலியா ராபர்ட்ஸ் என கலகலப்பாக பேசி விட்டு போனார் நடிகர் லிவிங்ஸ்டன்.
 
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் கிடைத்த அளவுக்கு இந்த படத்தில் எனக்கு தீனி இல்லை. ஒரிரண்டு சீன்கள் தான் என்றாலும் எழில் படம் என்பதால் மட்டுமே நடித்தேன். வசந்தபாலன் எனக்கு கடவுள், இயக்குனராக இருந்த என்னை நடிகராக்கியவர். எனக்கு காமெடியும் வரும் என்பதை எனக்கு உணர்த்தியவர் என் அண்ணன் இயக்குனர் எழில். அதனால் தான் ஒரு சீன் என்றாலும் நான் நடிக்கிறேன்.  உதயநிதி ஸ்டாலின் பெரிய குடும்பத்தின் வாரிசு என்றாலும் எல்லோரிடமும் சகஜமாக பழகக் கூடியவர். நல்ல மனிதர் என்றார் நடிகர் ரவி மரியா.
 
பல முக்கியமான நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்கும் போது மானிட்டரில் மிகவும் அமைதியாக அமர்ந்திப்பார் இயக்குனர்  எழில். அவர் பொறுமைசாலி மட்டும் இல்லை, புத்திசாலி. எடிட்டிங் தெரிந்த் ஒரு இயக்குனர். அது தான் இயக்குனர் எழிலின் வெற்றிக்கான முக்கிய காரணம். நல்ல இயக்குனர்கள் இங்கு அதிகமாக இல்லை. எழில் மாதிரி குறைந்தபட்சம் 10 இயக்குனர்கள் தற்போதைய தமிழ் சினிமாவுக்கு தேவை. உதயநிதி ஸ்டாலினை இரண்டு முறை பார்த்து பேசியிருக்கிறேன். யாருக்கு தெரியும் தமிழ் நாட்டின் வருங்கால முதலமைச்சருடன் கூட நான் பேசியிருக்க  வாய்ப்பு இருக்கிறது என்றார் இயக்குனரும், நடிகருமான ஜி.எம்.குமார்.
இது தான் கதையா? என்ற ரீதியில் ஒரு மெல்லிய கதையை சொல்லுவார் இயக்குனர் எழில். ஆனால் படமாக பார்க்கும் போது மிகவும் பிரமாதமான படமாக எடுத்து வைத்திருப்பார். அப்படி நான் நினைத்த நான்கு படங்களும் சூப்பர் ஹிட். அந்த மாதிரி  இந்த படமும் பெரிய வெற்றி பெறும். என் கைபேசியை எடுத்து பார்த்தால் என் மனைவியை விட யுகபாரதியின் மொபைல் நம்பருக்கு தான் அதிகம் பேசியிருப்பேன். அவருடன் தான் அதிக பாடல்கள் பணியாற்றியுள்ளேன், அது ஒரு நல்ல அனுபவம் என்றார் இசையமைப்பாளர் டி.இமான்.
 
10 வருடங்களுக்கு முன்பு தமிழ் படங்களுக்கு வரிவலக்கு சட்டத்தை கொண்டு வந்த கலைஞருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பாகுபலி மாதிரி படங்கள் ஏன்  தமிழில் எடுக்கப்படுவதில்லை என ஆதங்கமாக இருக்கிறது. நாட்டில் விவசாயிகளின் பிரச்சினையை பிரதமர் மோடி கண்டு கொள்ளவில்லை. ஆனால் சத்குரு விழாவில் கலந்து கொள்கிறார். முடியும்போது ஒலிக்க வேண்டிய தேசிய கீதத்தை திரையரங்குகளில் படம் ஆரம்பிக்கும் முன்னரே போடுகிறார்கள். அதுவும் தமிழ்நாட்டில் தமிழில் கூட தேசிய கீதத்திற்கு அறிவிப்பு இல்லை. இதை எந்த ஒரு மாநில கட்சியும் கண்டு கொள்ளவில்லை என்று பாய்ச்சலாக பேசி விட்டு போனார் மன்சூர் அலிகான்.
 
இதுநாள் வரை பரோட்டா சூரியாக எனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்திருந்தார் சுசீந்திரன். அதை உடைத்து எனக்கு புஷ்பா புருஷன் என்ற புதிய அடையாளத்தை கொடுத்தவர் சுசீந்திரனின் குரு எழில். என் மனைவி தான் அந்த அடையாளத்தால் ரொம்ப வருத்தப்படுகிறார். ஷூட்டிங்கில் நடிக்கும் நாங்கள் எவ்வளவு எக்ஸ்ட்ராவா பேசினாலும் அதை அனுமதிப்பார் இயக்குனர் எழில். அவருக்கு தெரியும் எதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று. உதயநிதி சின்சியரான நடிகர், நல்ல மனசுக்காரர். என் அப்பா இறந்தபோது பிரஸ்மீட்டை கூட கேன்சல் செய்து விட்டு எனக்காக மதுரை வரை வந்து என் அப்பாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். அந்த அளவு நட்புக்கு மரியாதை கொடுக்கக் கூடியவர். ரெஜினா பாடல் ஒன்ஸ் மோர் கேட்கும் வகையில் வந்திருக்கிறது. அதுவே 50 நாட்கள் வரை ஆடியன்ஸை தியேட்டருக்கு அழைத்து வரும் என்றார் நடிகர் சூரி.
 
இமான் ஒரு உணவுப்பிரியர். கம்போஸிங்குக்கு முன்பு அவருக்கு பிரியாணி ரெடி பண்ணிருவேன். இமானும், யுகபாரதியும் சேர்ந்துட்டாலே தன்னால சூப்பர் ஹிட் பாடல்கள் வந்து விடும். நம் முன்னோடி இயக்குனர்கள் எல்லோரும் மிகவும் திறமையானவர்கள், புத்திசாலிகள், அவர்களுடம் இணைந்து பணியாற்றுவது ஒரு சிறப்பான அனுபவம். இப்போது இருப்பவர்கள் சினிமா வரலாற்றை, நம் மூத்த இயக்குனர்களை பற்றி தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள். அது தவறு, மாற வேண்டும் என்றார் இயக்குனர் எழில். 
சிருஷ்டி என்ன சொன்னாலும் நம்புவார், கொச்சினை தாண்டி ஒரு கடற்கரையில் ஷூட்டிங் நடந்தபோது சிருஷ்டிக்கு கேரவன் கூட இல்லை. ஆனாலும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். எம்புட்டு இருக்குது ஆசை பாட்டை பத்தி எல்லோரும் பேசுனாங்க. அந்த பாட்டு அவ்ளோ பெரிய அளவு பேசப்படறதுக்கு முக்கிய காரணம் ரெஜினா தான். நான் மூணாவதா ஒப்பந்தமான படம் தான் சரவணன் இருக்க பயமேன். ஆனா முதல்ல ரிலீஸ் ஆகுது, அது தான் எழில் சாரின் வேகம். படம் பார்த்துட்டு நல்லா இருந்தா உடனே விமர்சனம் எழுதுங்க, இல்லைனா மூணு நாள் கழிச்சு எழுதுங்க என்றார் நாயகன் உதயநிதி ஸ்டாலின்.
 
விழாவில் நாயகிகள் ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, கவிஞர் யுகபாரதி, நடிகர்கள் ரோபோ சங்கர், கும்கி அஸ்வின், சுப்புராஜ், ராஜாசேகர், சாம்ஸ், நடிகைகள் ஜாங்கிரி மதுமிதா, ரிஷா ஆகியோரும் பேசினார்கள்.

No comments:

Post a Comment