'Gnavel Raja is not capable' Says Producer Kalaipuli S.Thanu
'Gnavel Raja is not capable' Says Producer Kalaipuli S.Thanu
தயாரிப்பாளர்களை விமர்சிக்க விஷாலுக்கு என்ன தகுதி இருக்கிறது? - கலைப்புலி தாணு ஆவேசம்
'தயாரிப்பாளர்களை விமர்சிக்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது... உன்னால் உன் அப்பா ஜிகே ரெட்டிக்கே அவமானம்', என்று விஷாலை வெளுத்து வாங்கினார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு.
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிடுகிறார். இதுகுறித்த செய்தியாளர் சந்திப்புகளில் தயாரிப்பாளர்கள் குறித்து தரக்குறைவாக விஷால் பேசியதாகக் கூறி, இன்று நடிகர் சங்கத்தை முற்றுகையிட்டனர் தயாரிப்பாளர்கள்.
கலைப்புலி தாணு, ராதாகிருஷ்ணன், டி சிவா, ஜேஎஸ்கே, சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது விஷாலின் நடவடிக்கைகள், பேச்சுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த முன்னணி தயாரிப்பாளரும், இப்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான கலைப்புலி தாணு, விஷால் இத்துடன் தனது விஷமத்தனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
பொதுவாக, எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிப்பவர் தாணு. ஆனால் அவரையே கோபப்படுத்தி விட்டார்கள் விஷாலும் பிரகாஷ் ராஜும். நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் விஷாலும், பிரகாஷ் ராஜும் தாணுவை கடுமையாகப் பேசினர். குறிப்பாக பிரகாஷ் ராஜ்.
இதற்கெல்லாம் இன்று வட்டியும் முதலுமாக சேர்த்துக் கொடுத்தார் கலைப்புலி.
அவர் பேசுகையில், 'தம்பி விஷால்.... தயாரிப்பாளர்களை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்... அவர்களை விமர்சிக்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது? 1200 உறுப்பினர்களுடன் மிக மரியாதைக்குரிய அமைப்பாக உள்ள தயாரிப்பாளர் சங்கத்தை விமர்சிக்க நீ யார்? என்ன தகுதி இருக்கிறது? உன்னால் உன் தந்தை தயாரிப்பாளர் ஜிகே ரெட்டிக்கே அவமானம். உன்னால் எத்தனை தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கிறார்கள்... நினைத்துப் பார்த்ததுண்டா?
யாரிடமும் கை நீட்டி நிற்காத செல்லமே தயாரிப்பாளர் உன்னால் பட்ட கஷ்டங்கள் நினைவில்லையா? மத கஜ ராஜா என்ற படத்தை எடுத்துவிட்டு நடுத் தெருவுக்கு வந்துவிட்ட ஜெமினி நிறுவனத்தை நினைத்துப் பார்...
இளையதளபதி என விஜய்க்குப் பட்டம் சூட்டினால், நீ புரட்சித் தளபதி என்று போட்டுக் கொள்கிறாய்... அவர் புலி என்று படமெடுத்தால், நீ பாயும் புலி என்று படமெடுக்கிறாய்.. அவ்வளவு விஷமத்தனம்... கெட்டம் எண்ணம்.
கண்ணியமான மனிதர் நாசர் அவர்களே... இந்த விஷால் மீது நடவடிக்கை எடுங்கள். அல்லது நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
இந்தத் தேர்தலின் வாக்குகள் எண்ணப்படும் நாளன்று தெரியும், இந்த விஷாலின் லட்சணம் என்ன என்பது.
அவருக்கு அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற நப்பாசை. மக்கள் உங்களை ஓட ஓட விரட்டியடிப்பாரகள்," என்றார்.
பிரகாஷ் ராஜ் பற்றிக் கூறுகையில், "தயாரிப்பாளர்களைப் பற்றிப் பேசும் தகுதியே இல்லாதவர் பிரகாஷ்ராஜ். இவரால் எத்தனை தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என ஒரு லிஸ்டே போடலாம். தெலுங்கில் எத்தனை முறை இவருக்கு தடைப் போட்டிருக்கிறார்கள்? தமிழ் பேசிவிட்டால், தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களை கண்டபடி பேச உரிமை வந்துவிடுமா? இவருக்கு பிரச்சினை என்று வந்தபோது அதைத் தீர்க்க முன்வந்தது இதே தயாரிப்பாளர் சங்கம்தான்," என்றார்.
கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக குற்றம் சாட்டிய ஞானவேல் ராஜாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தாணு, "இந்த இரண்டு ஆண்டு நிர்வாகத்தில் கட்டப்பஞ்சாயத்து எப்போது நடந்தது என்று ஞானவேல் ராஜாவால் கூற முடியுமா? இவரால் சிவகுமார் குடும்பத்துக்கே அவமானம். சிங்கம் 3 படத்தை எத்தனை முறை தள்ளிப்போட்டு மற்ற தயாரிப்பாளர்களின் வயிற்றில் அடித்தார்?
கொம்பன் படத்தை வெளியிட முடியாமல் இதே ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் அழுதாரே... அப்போது துணைநின்று பிரச்சினையைத் தீர்த்து படம் வெளியிட உதவியது இதே தயாரிப்பாளர் சங்கம்தானே... அது கட்டப்பஞ்சாயத்தா? அந்தப் படத்துக்காக அரசியல் தலைவர்களிடமெல்லாம் பேசி, சுமூகமாக படத்தை வெளியிட்டது இதே தயாரிப்பாளர்கள்தானே... இவர்களைப் பற்றிப் பேச ஞானவேல் ராஜாவுக்கு என்ன தகுதி இருக்கிறது?," என்றார்.
No comments:
Post a Comment